உலக அளவில் குரங்கு அம்மை நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில், குரங்கு அம்மை நோய்ப் பரவலை சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் பிரகடனம் செய்துள்ளது.
இந்த அறிவிப்பை உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அறிவித்துள்ளார்.
குரங்கு அம்மை நோய் தொடர்பாக வல்லுநர் குழு உறுப்பினர்கள் உடனான ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாக டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
வல்லுநர் குழுவின் பெரும்பான்மை ஆதரவு இதற்கு இல்லை என்றாலும் இந்த உச்சகட்ட எச்சரிக்கை முடிவை அறிவிக்க காரணம் அதிகரித்து வரும் குரங்கு அம்மை நோய் மற்றும் தடுப்பூசி, சிகிச்சை பற்றாக்குறை காரணம் என அவர் தெரிவித்தார்.
கடந்த 1970ஆம் ஆண்டில் ஆபிரிக்காவின் காங்கோ நாட்டில் முதல்முறையாக குரங்கு அம்மை கண்டறியப்பட்டது. தற்போது, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகளில் தொற்று பரவி உள்ளது.
நடப்பு ஆண்டில் இதுவரை உலகம் முழுவதும் சுமார் 16,000 குரங்கு அம்மை பாதிப்புகள், 75 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் 5பேர் உயிரிழந்துள்ளனர்.
காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் மற்றும் இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும்.