இலங்கைக்கு வழங்கும் பொருளாதார உதவியை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2007 ஆம் ஆண்டு ஜப்பானிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என விக்கிலீக்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பானிய விசேட தூதுவர் யசுஷி அகாஷியிடம், இதனை தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக மேற்கொண்ட 14 விஜயத்தை விட 2007 ஜூன் 5 அன்று கொழும்பு வித்தியாசமாக இருந்தது என தெரிவித்து அகாஷி வெளியிட்ட டுவீட்டை மேற்கோளிட்டே விக்கிலீக்ஸ் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் ரணில் விக்கிரமசிங்கவின் குறித்த கோரிக்கைக்கு அன்று பதிலளித்த ஜப்பானிய விசேட தூதுவர், நாட்டின் தலைவர்களின் நலனுக்காக மக்கள் தண்டிக்கப்பட கூடாது என பகிரங்கமாக வலியுறுத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சுதந்திர கட்சியும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.