சட்டவிரோதமான முறையில் எரிபொருளினை சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 50 ஆயிரம் முதல் 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணப்பரிசு வழங்கப்படவுள்ளது.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய 100 லீற்றர் வரையான பெற்றோல் அல்லது டீசலை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும், 100 முதல் 500 லீற்றர் வரையிலான எரிபொருளை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு 02 இலட்சம் ரூபாவும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
அத்துடன், 500 முதல் 1000 லீற்றர் வரையான எரிபொருளைக் கைப்பற்றுவோருக்கு 03 இலட்சம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது.
அதிகரித்து வரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் எரிபொருளின் தேவையைப் பயன்படுத்தி சிலர் சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் நுகர்வோர் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்தநிலையில் இதனை தடுக்கும் வகையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.