சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை பல அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
அரசியல் கட்சிகளுடனான பேச்சு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மகா சங்கத்தினர் தலைமையில், சிவில் அமைப்புக்கள், இளைஞர் உட்பட முழு மக்களும் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக பலமான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொண்டிருப்பதாக ஜனாதிபதி அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் முதல் கட்ட கலந்துரையாடலில் இணைந்துள்ளதுடன், இரண்டாவது கலந்துரையாடல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் நடத்தப்பட்டுள்ளது.
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் செயலாளர் நாயகம் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மூன்றாவது கலந்துரையாடல் தேசிய காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட குழுவினருடன் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தையில் இணைந்து கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.