ரஷ்யாவுடன் கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் பாலம் தகர்க்கப்பட வேண்டும் என உக்ரைன் கூறியுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைய தினங்களாக ஆக்கிரமிப்பு கிரீமியாவில் தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில், உக்ரைனின் இந்த கருத்து ரஷ்யாவை மேலும் கோபமடைய வைத்துள்ளது.
கிரீமியா தீபகற்பத்தை தங்களது பகுதியுடன் இணைத்து ரஷ்யா கட்டியுள்ள பாலம் சட்டத்துக்கு விரோதமானது என்பதால் அந்த பாலம் தகர்க்கப்பட வேண்டியது அவசியம் என உக்ரைனின் ஜனாதிபதியின் ஆலோசகர் மிகய்லோ பொடோலியக் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரஷ்யா தாமாக முன்வந்து அந்தப் பாலத்தை தகர்க்கின்றதா அல்லது வலுக்கட்டாயமாக அந்தப் பாலம் தகர்க்கப்படுகின்றதா என்பது முக்கியமில்லை எனவும் எந்த வகையிலாவது அந்தப் பாலம் தகர்க்கப்பட்டே ஆக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த கருத்தின் மூலம் உக்ரைன் துருப்புக்கள் பாலத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புள்ளதை அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
ஆனால், கிரீமியாவில் உக்ரைன் தாக்குதல் நடத்தினால் அதற்கான பதிலடித் தாக்குதலுக்கு, உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளை முடிவு செய்யும் தலைமை மையங்களும் தப்பாது என ரஷ்யா எச்சரித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட தையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.
அதனைத் தொடர்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அரசுப் படையினருக்கு எதிராக சண்டையிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினர். அப்போது ரஷ்யாவும் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.
கிரீமியாவை தங்களுடன் இணைத்துக் கொண்டதற்குப் பிறகு, அந்த தீபகற்பத்துக்கும் தங்கள் நாட்டுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துவதற்காக சுமார் 19 கி.மீ. நீளமுடைய அந்தப் பாலத்தை கட்டியது. இந்தப் பாலத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கடந்த 2018ஆம் ஆண்டு திறந்துவைத்தார்.