உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் ஷாபோரிஸியா அணுமின் நிலைய விவகாரம் குறித்து விவாதிப்பதாக துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, ஆலைக்கு அருகில் உள்ள அனைத்து கண்ணிவெடிகளையும் ரஷ்யா அகற்ற வேண்டும் என்று ஸெலென்ஸ்கி கேட்டுக் கொண்டார்.
ஆகவே, ‘நாங்கள் புடினுடன் இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதிப்போம், மேலும் உலக அமைதிக்கான ஒரு முக்கியமான படியாக ரஷ்யா செய்ய வேண்டியதைச் செய்யுமாறு குறிப்பாக அவரிடம் கேட்டுக்கொள்வோம்,’ என்று எர்டோகன் மேலும் கூறினார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்யா படையெடுத்த பிறகு எர்டோகனின் உக்ரைன் விஜயம் அந்நாட்டுக்கு அவர் மேற்கொண்ட முதல் பயணமாகும்.
இதனிடையே தெற்கு உக்ரைனில் உள்ள ஷாபோரிஸியா அணுமின் நிலையத்திற்கு அருகே நடக்கும் சண்டை குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோருடன் லிவிவ் நகரில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.