நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு இரண்டு வருடங்களுக்கு நிலக்கரி வழங்க ரஷ்ய நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.
லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ஜகத் பெரேரா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி விநியோகத்திற்கான விலைமனு கோரலுக்கு பதிலளித்த இரண்டு நிறுவனங்களில், ரஷ்ய நிறுவனம் ஏலம் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளதாகவும், மற்றைய நிறுவனங்களும் இன்று 19 வரை மேன்முறையீடு செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்டோபர் இறுதி வரை போதுமான நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செப்டம்பர் 30 வரையான காலப்பகுதிக்கு தேவையான நிலக்கரியே இருந்தாகவும், நுரைச்சோலை மின் நிலையத்தின் ஒரு மின்பிறப்பாக்கியை கட்டாய பராமரிப்புக்காக மூட வேண்டியிருந்தது.
மற்றொரு மின்பிறப்பாக்கி அண்மையில் பழுதடைந்தது. அது வழமைக்கு திரும்ப இரண்டு வாரங்களாகும் என்பதால், ஒக்டோபர் இறுதி வரை கையிருப்பு போதுமானதாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
ஐந்து மாத கடன் சலுகை காலத்தை கோரியதாகவும், இருப்பினும், ரஷ்ய நிறுவனம் ஆறு மாதங்களை வழங்க ஒப்புக்கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒக்டோபர் முதல் நிலக்கரியை இறக்குமதி செய்யத் தொடங்குவோம் என தெரிவித்த அவர், விலை சூத்திரத்தின் மூலம் விலை நிர்ணயிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
அண்மையில் 4.5 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரியை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு, மூன்று ஆண்டுகளுக்கு வழங்குவதற்கான கேள்விப் பத்திரத்தை முன்வைத்தது.
கடந்த 10 ஆம் திகதி ஏலம் முடிவடைந்தது எனவும் லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தி நிலையத்திற்கு ஆண்டுக்கு 2.36 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரி தேவைப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் மே மாதங்களில் மட்டுமே நிலக்கரியை இறக்குமதிசெய்ய முடியும்.
முந்தைய வழங்குநர் இன்னும் 11 இலட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் நிலக்கரியை வழங்க வேண்டியிருந்தது என்றும், அவற்றில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்டோபர் முதல் ரஷ்ய நிறுவனம் 2022ஆம் ஆண்டுக்குரிய மீதமுள்ள நிலக்கரியையும், 2023ஆம் ஆண்டும், மற்றொரு வருடத்திற்கும் நிலக்கரியை வழங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.