இரு நாடுகளினதும் இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தியாவும் அமெரிக்காவும் வழக்கமான ‘யுதாபியஸ்’ தொடர் போர்ப் பயிற்சிகளை உத்தரகாண்டில் உள்ள சீனா எல்லைக்கு அருகில் உள்ள அவுலி பகுதியில் நடத்தவுள்ளது.
பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்த பயிற்சியானது, இரு நாட்டுப் படைகளும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முறியடிப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கூடுதல் துருப்புக்கள் மற்றும் தளவாடங்கள் குவிக்கப்பட்ட பகுதியாக இந்த மலைப்பகுதி காணப்படுவதோடு அங்கு ஒக்டோபர் 18முதல் 31வரை பயிற்சி நடைபெறும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தாய்வான் காரணமாக அமெரிக்கா, சீனா இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவும் கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து சீனாவுடன் எல்லைப் பிரச்சினையால் மோதல் போக்கில் உள்ளது.
இந்நிலையில் 18ஆவது தடவையாக நடைபெறும் இப்போர்ப்பயிற்சியானது, இருதரப்பிடையே இணைந்த செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இரு படைகளும் இறுதியாக அலாஸ்காவில் போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.