ஐக்கிய அரபு அமீரகம் கிட்டத்தட்ட 6.5 ஆண்டுகளுக்கு பிறகு தனது தூதரை ஈரானுக்கு அனுப்புவதாக அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் உடனான உறவுகளை வலுப்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முயற்சிகளுக்கு இணங்க, தூதரக பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவின் ஒரு பகுதியாக ஈரானுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் சைஃப் முகமது அல் ஜாபி, எதிர்வரும் நாட்களில் தனது கடமைகளை மீண்டும் தொடங்குவார் என ஐக்கிய அரபு அமீரக தெரிவித்துள்ளது.
ஈரானில் உள்ள அதிகாரிகளுடன் இணைந்து இருதரப்பு உறவுகளை மேலும் முன்னேற்றுவதற்கு பங்களிக்க அமீரக தூதர் அல் ஜாபி ஈரான் செல்வார் எனக் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டில் ஈரானிய எதிர்ப்பாளர்கள் சவுதி தூதரக தூதரகங்களை தாக்கியதை அடுத்து, ஈரானின் இராஜதந்திர உறவுகளை பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் சூடான் முறித்துக் கொண்டன.
இதற்கு மத்தியில் 2016இல் ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை குறைத்தது. எனினும் பல ஆண்டுகால பகைமைக்குப் பிறகு, வளைகுடா கடல் மற்றும் சவுதியின் எரிசக்தித் தளங்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து 2019இல் ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுடன் மீண்டும் சுமூக உறவில் ஈடுபடத் தொடங்கியது.
இந்த நிலையில், கடந்த வாரம், அமீரகம் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர்கள் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து தொலைபேசியில் உரையாடினர். ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுடன் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வணிக மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.