ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலால் அச்சுறுத்தப்பட்ட அணுமின் நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைனில் உள்ள ஷாபோரிஸியா அணுமின் நிலையத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா மற்றும் உக்ரைன் பரஸ்பரம் குற்றம்சாட்டி, பேரழிவு ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.
இந்தநிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்குறித்த நான்கு தலைவர்களும் ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினர்.
இதற்கிடையில், சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு உக்ரனியர்கள் விழிப்புடன் இருக்குமாறு ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
‘ரஷ்யா குறிப்பாக அருவருப்பான, குறிப்பாக கொடூரமான ஒன்றைச் செய்ய முயற்சி செய்யலாம் என்றும் எதிரிகளின் முக்கிய நோக்கங்களில் ஒன்று நம்மை அவமானப்படுத்துவதாகும்’ என்று அவர் மேலும் கூறினார்.
ஆனால், எல்லா ஆத்திரமூட்டல்களையும் எதிர்க்கும் அளவுக்கு நாம் வலுவாக இருக்க வேண்டும்’ என அவர் வார இறுதி உரையில் தெரிவித்தார்.