உணவு உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து நாடு முழுவதும் தன்னிறைவு பெற்ற கிராமங்களை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
வானிலிருந்து ஒரு சொட்டு நீரைக் கூட கடலுக்குச் செல்ல விடப்போவதில்லை என்ற பராக்கிரம பாகுவின் கருத்தியலின் பிரகாரம் செயற்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அடுத்த 100 நாட்களுக்குள், கிராம மட்டத்தில் உணவு பாதுகாப்பு குழுக்களை நிறுவி, பயிர் செய்கையை அதிகரிக்குமாறும் மாவட்ட செயலாளர்களுக்கும் பிரதமர் பணிபுரைவிடுத்துள்ளார்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மாகாண மாநாட்டில் பிரதமர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
வெற்று நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் விஷயங்களை ஒருபோதும் செயல்படுத்தக்கூடாது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பனவின் உதவிகள் கிடைக்கவும் இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கும் கிராம மட்டத்திலிருந்து திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.