ரஷ்ய ஆக்கிரமிப்பு போரிஷியா அணு மின் நிலையத்தை ஐ.நா. நிபுணர் குழு, அடுத்த வாரம் பார்வையிடவுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இது குறித்து உக்ரைன் எரிசக்தித் தறை அமைச்சருக்கான ஆலோசகர் லனா ஸெர்கல் கூறுகையில், ‘ஸபோரிஷியா நகரிலுள்ள அணு மின் நிலையத்தை ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி அமைப்பின் (ஐஏஇஏ) நிபுணர்கள் அடுத்த வாரம் நேரில் சென்று பார்வையிடுவார்கள்.
அவர்கள் அந்த நகருக்குள் சென்று, அணு மின் நிலையத்தைப் பார்வையிடுவதில் போக்குவரத்துப் பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
ஐ.நா. நிபுணர் குழு, ஸபோரிஷியா அணு மின் நிலையத்துக்கு வருவதைத் தடுப்பதற்கான சதிச் செயல்களை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.
அந்த மின் நிலையத்துக்கு ஐ.நா. பார்வையாளர்கள் வர ரஷ்யா ஒப்புக் கொண்டாலும், அதற்கேற்ற சூழலை உருவாக்காமல் இருந்து வருகிறது. அதைவிட, ஸபோரிஷியா அணு மின் நிலையத்துக்கு ஐ.நா. குழுவினர் வருவதைத் தடுப்பதற்கான சூழலைத்தான் ரஷ்யா ஏற்படுத்தி வருகிறது’ என கூறினார்.
தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுசக்தி மையமான ஸபோரிஷியா அணு மின் நிலையம், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள போதிலும், உக்ரைன் அதிகாரிகளாலேயே இயக்கபடுகின்றது.