அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் திகழும் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பதிலளித்துள்ளார்.
நார்விச்சில் நடந்த இறுதித் தலைமைத்துவக் கூட்டத்தில் உரத்த கரவொலி எழுப்பும் வகையில், ‘மக்ரோன் பிரித்தானியாவின் நண்பரா, பகைவரா என்பது குறித்து இனிதான் முடிவு செய்ய வேண்டும். அவரது சொல்லைவிட செயலைக் கொண்டுதான் முடிவெடுக்க முடியும்’ என கூறினார்.
அத்துடன், பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், ‘சொற்கள் அல்ல செயல்களால்’ அவரைத் கையாளுவேன் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அல்ஜீரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த மக்ரோன் கருத்து தெரிவிக்கையில்,
இதே கேள்வி என்னிடம் கேட்கப்பட்டால், நான் ஒரு நொடி கூட தயங்க மாட்டேன். பிரான்ஸ் பிரித்தானியா மக்களின் நண்பன் என கூறுவேன்.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா நண்பர்களா அல்லது எதிரிகளா என்று சொல்ல முடியாது என்பது நடுநிலையான சொல் அல்ல’ என கூறினார்.
இந்த கருத்து மூலம், பிரித்தானியாவின் நெருங்கிய நட்பு நாடான பிரான்ஸின் ஜனாதிபதியை லிஸ் ட்ரஸ் அவமதித்துவிட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொழிற்கட்சியின் டேவிட் லாம்மி, ‘பிரித்தானியாவின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரை’ அவர் அவமதித்ததாகக் கூறினார்.
அதே கேள்வியை மற்றொரு அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான போட்டியாளர் சுனக்கிடம் கேட்டபோது, ‘மக்ரோன் ஒரு நண்பர்’ என்று கூறினார்.
ஒரு பழமைவாத அமைச்சர் ட்ரஸின் கருத்துக்கள், பிரான்ஸுடனான எங்கள் உறவை முற்றிலுமாக குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.