நாட்டில் கடந்த மூன்று மாத காலப் பகுதியில் மாத்திரம் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு இடையில் காணப்பட்ட மோதல்கள் காரணமாகவே இந்த துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அம்பலங்கொடை பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிந்துள்ளார்.
பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே அவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் அம்பலங்கொடை பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, நீர்கொழும்பு பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்திருந்தனர்.
காரொன்றில் பயணித்துக்கொண்டிருந்தவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில், இருவர் காயமடைந்துள்ளனர்.
காரில் சென்றவர் மற்றும் வீதியில் சென்றவர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் அண்மைக்காலமாக இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.