ஊடக அடக்குமுறையை உடனடியாக நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய சஜித் பிரேமதாச, ஊடகவியலாளர்கள் மீதான ஒடுக்குமுறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஊடக சுதந்திரத்திற்கு வழி வகுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக இருந்தபோது, குறிப்பிட்ட ஊடகமொன்றை ஒடுக்க வேண்டாம் என நான் எச்சரித்தேன், அதற்காக அவர்கள் திட்டங்களை வகுத்துக்கொண்டிருந்தார்கள். அந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
நாட்டின் வறிய மக்களைப் பலப்படுத்தும் வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய குறித்த ஊடக வலையமைப்பை நசுக்குவதற்கு இன்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2022 செப்டம்பரில் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவைக்கு இது மிகவும் தவறான செய்தியை அனுப்பும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதும் இதேபோன்றதொரு சூழ்நிலையை ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த ஊடகத்தின் ஊடகவியலாளர்கள் பலர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதில் தாமதம் குறித்து கேள்வி எழுப்பினார்.
தனது அரசியல் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு காலத்தில் குறித்த ஊடக வலையமைப்பே உறுதுணையாக இருந்ததாகவும் அவர் ஜனாதிபதிக்கு நினைவுபடுத்தினார்.
எனவே, ஊடகங்கள், சமூக ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான ஒடுக்குமுறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஊடக சுதந்திரத்திற்கு வழி வகுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.