ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 71வது ஆண்டு நிறைவு விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
‘நமது அபிலாஷைகளுக்கு உயிர் கொடுப்போம் – சவாலை ஏற்போம் – சகாப்தத்தின் பணிக்கு தோள் கொடுப்போம்’ எனும் கருப்பொருளில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் இந்த வருடாந்த மாநாட்டுடன் இணைந்து இன்று கட்சியின் அரசியலமைப்பிலும் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்காக சுதந்திரக் கட்சியின் அகில இலங்கைக் குழுவும் இன்று கூட்டப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் மத்திய குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான பிரேரணைகள் மேற்படி குழுவின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன.
கட்சியின் அரசியலமைப்புத் திருத்தத்தின் பின்னணியில் கட்சித் தலைவரின் அதிகாரங்களை அதிகரிக்கும் நோக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது 1951 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி கொழும்பு நகர மண்டபத்தில் மறைந்த பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.