சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது.
மேலும், குறைந்தது 50பேர் காயமடைந்தனர் மற்றும் 16பேர் காணவில்லை என அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிச்சுவான் தலைநகர் செங்டுவிற்கு தென்மேற்கே நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி, மதியம் 1 மணியளவில் 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் சுமார் 100,000 மக்கள் வசிக்கும் காங்டிங்கிலிருந்து தென்கிழக்கே 43 கிலோமீட்டர் (27 மைல்) தொலைவில் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்திற்குப் பிறகு சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் மிதமான நடுக்கத்தை அனுபவித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் ஸ்டேட் கவுன்சிலின் கூற்றுப்படி, சீனா நிலை 3 அவசரகால பதிலைச் செயற்படுத்தியது மற்றும் மீட்புப் பணியாளர்களை மையத்திற்கு அருகிலுள்ள லுடிங் கவுண்டிக்கு அனுப்பியது. நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட நிலச்சரிவுகளால் தடுக்கப்பட்ட வீதிகளை அகற்ற மீட்புப் பணியாளர்கள் உதவுவதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது.
84 மில்லியன் மக்கள் வசிக்கும் மாகாணமான சிச்சுவான், சக்திவாய்ந்த பூகம்பத்திற்கு முன்பே மிகவும் சவாலான கோடையை எதிர்கொண்டது. கடந்த இரண்டு மாதங்களில், மாகாணம் வறட்சி மற்றும் 60 ஆண்டுகளில் இல்லாத மோசமான வெப்ப அலைகளை சந்தித்துள்ளது.
சிச்சுவான் மலைகள் வழியாகச் செல்லும் லாங்மென்ஷன் பள்ளம் காரணமாக நிலம் சூழ்ந்த பகுதி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது.
2008இல் சிச்சுவானைத் தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நாட்டின் மிகப் பெரிய பேரழிவுகளில் ஒன்றாகும். கிட்டத்தட்ட 90,000பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,450 கிலோமீட்டர் (900 மைல்) தொலைவில் உள்ள நகரங்களில் நடுக்கம் உணரப்பட்டது.
கடந்த ஆண்டு, சிச்சுவானில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 60பேர் காயமடைந்தனர்.