எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60ஆக குறைக்க முன்மொழிந்தார்.
இந்த முன்மொழிவின்படி, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 60 வயதை பூர்த்தி செய்த அரச ஊழியர்கள் ஓய்வு பெற வேண்டும்.
இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தினை தாண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான சுற்றுநிரூபம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், 60 வருட வரம்பு பல அத்தியாவசிய தொழில்களைச் சேர்ந்த அரச ஊழியர்களை பாதிக்காது எனவும் உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
வைத்தியர்கள், தாதியர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்களுக்கு அத்தியாவசிய சேவை அடிப்படையில் 63 வயது வரை அரச சேவையில் இருக்க வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான திருத்தங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அரச சேவையை முடிந்தவரை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், அதற்கேற்ப ஓய்வு பெறும் வயதைக் குறைக்கவும் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே குறிப்பிட்டுள்ளார்.