நாடு முழுவதும் உள்ள 400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டண முறை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அண்மையில் புதிய கட்டண முறையை அறிமுகம் செய்துள்ளது.
இதற்கமைய முன்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருளின் இருப்பிற்கு அதனை பெற்றுக்கொள்வதற்கான முதல் நாள் இரவு 9.30 மணிக்கு முன்னர் பணம் செலுத்த வேண்டும்.
எனினும் தற்போதைய சூழலில் இந்த புதிய கட்டண முறைமை காரணமாக பாரியளவில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக எரிபொருள் நிரப்பு உரிமையாளர்கள் பணம் செலுத்த தவறினால், எரிபொருளினை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் மீண்டும் தோன்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களும் இதேபோன்ற கட்டண முறையைப் பின்பற்றினாலும், அவர்களுக்கு நள்ளிரவு 12 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இதனை பின்பற்றினால், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வசதியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.