அடுத்த மூன்று ஆண்டுகளில் 25 லட்சம் பணியாளர்களை உருவாக்க வேண்டும் என மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்தின் கீழ் நடைபெற்ற பயிற்சி நிறுவனங்களின் கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவைத் திறன் மையமாக மாற்றும் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை குறித்து விவரித்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது: தொழில்நுட்பம், உலகை வேகமாக மாற்றியமைத்து வருகிறது.
கல்வி முதல் சுகாதாரம் வரை, வேளாண்மை முதல் நிதி வரை, ஒவ்வொரு துறையும் தொழில்நுட்பத்தால் முன் எப்போதும் இல்லாத வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் புதிய வாய்ப்புகளும், புதிய திறன் சூழல்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 25 லட்சம் பயிற்சியாளர்களைத் தயார் செய்ய வேண்டும். அவர்களை உருவாக்குவதற்கு பயிற்சியாளர்களின் திறன்களை கட்டமைப்பது அவசியம்.
அடுத்த தலைமுறை பணியாளர்களை உருவாக்குவதில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.
பயிற்சி நிறுவனங்கள், திறன் சூழலியலை வலுப்படுத்த எதிர்கால உத்தியுடன் தங்களை மறுவடிவமைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.