இந்தியாவில் நடைபெறும் ரி-20 லீக் தொடரான ஐ.பி.எல். தொடரில், ஐந்து முறை சம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, 2017ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட மஹேல ஜயவர்தன, மும்பை இந்தியன்ஸிற்கு சொந்தமான மூன்று அணிகளின் செயற்திறன் மேற்பார்வையாளராக தரம் உயர்த்தப்பட்டிருந்தார். மஹேலயிக்கு கீழ், மும்பை இந்தியன்ஸ் மூன்று சம்பியன் பட்டங்களை வென்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் ஆகிய அணிகள் மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் இணைந்ததன் பின்னணியில், அணி நிர்வாகம் மஹேல ஜயவர்த்தன மற்றும் ஸகீர் கான் ஆகியோரை மத்திய அணியின் ஒரு பகுதியாக முறையே உலகளாவிய செயல்திறன் மற்றும் கிரிக்கெட் மேம்பாட்டுக்கான உலகளாவிய தலைவராக தரம் உயர்த்தியது.
இந்த நிலையில், தற்போது தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரரான மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தென்னாப்பிரிக்கா அணியின் பயிற்சியாளராக செயற்பட்டு வரும் பவுச்சர், வரவிருக்கும் ரி-20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு தேசிய அணியுடன் தனது பணியை முடித்துக் கொள்வார். அதன்பிறகு அடுத்துவரும் ஐ.பி.எல். தொடரிலிருந்து அவரது பணியை தொடருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ட்ரெவர் பெய்லிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.