காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கட்சித் தலைவர் பதவி வேண்டாம் என்பதில் நேரு குடும்பத்தினர் உறுதியாக இருப்பதாகவும் தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், வேட்புமனுத்தாக்கல் செய்யும் திகதியை விரைவில் முடிவு செய்ய உள்ளதாகக் கூறிய அவர், தான் காங்கிரஸ் தலைவரானால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பொதுச் செயலாளர் அஜய் மேகன் மற்றும் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் முடிவு செய்வார்கள் என கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகியதையடுத்து, சோனியா காந்தி கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை (சனிக்கிழமை) தொடங்கவுள்ளது. செப்டம்பர் 30ஆம் திகதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
வாக்கு எண்ணிக்கை ஒக்டோபர் 19ஆம் திகதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கெலாட் தவிர, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சசி தரூர், திக்விஜய் சிங், மணீஷ் திவாரி ஆகியோரும் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.