இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
நாக்பூரில் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும் அவுஸ்ரேலிய அணிக்கு ரோஹித் சர்மாவும் தலைமை தாங்கவுள்ளனர்.
மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின், முதல் போட்டியில் அவுஸ்ரேலியா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஆகவே இப்போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி இரு அணிகளும் களமிறங்கும். அவுஸ்ரேலியா வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை வெல்லும். அதேவேளை இந்தியா வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை தக்கவைக்கும்.
போட்டி நடைபெறும் நாக்பூர் ஆடுகளத்தை பொறுத்தவரை ஈரப்பதம் காரணமாக, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் உதவியாக இருக்கும்.
இதன்படி, இந்தியா அணியில் யுஸ்வேந்திர சஹால் மற்றும் அக்ஸர் பட்டேல் அவுஸ்ரேலிய அணியில் மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் செம்பா ஆகியோர் இன்றைய போட்டியில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சமீபத்திய இந்திய அணியை பொறுத்தவரை மொஹாலியில் நடைபெற்ற முதல் ரி-20 போட்டியில், இந்திய அணி 200க்கு அதிகமான ஓட்டங்களை பெற்றும் பந்துவீச்சாளர்களின் பொறுப்பின்மையால் இந்தியா அணி தோல்வியை தழுவியது.
இது, அவர்களின் பந்துவீச்சு பிரிவில் தற்போதைய சில குறைபாடுகளின் நியாயமான பிரதிபலிப்பாகும். கடைசி ஓவர்களில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்சல் பட்டேல் ஓட்டங்களை வாரி இரைத்தனர்.
அன்றைய போட்டியில், அக்சர் படேலைத் தவிர, மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு 10 ஓட்டங்களுக்கு மேல் கொடுத்தனர். இது இந்தியாவின் வேகப்பந்து வீச்சு பிரிவு பலவீனமாக இருப்பதை உணர்த்தியது.
ஆனால், துடுப்பாட்ட வரிசையை பொறுத்தவரை விராட் கோஹ்லி, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர்.
இன்றைய போட்டியில், ஹர்ஷல் படேலுக்கு மாற்றாக தீபக் சாஹர் உள்வாங்கப்படலாம். அத்துடன் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பும்ரா அணியுடன் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவுஸ்ரேலிய அணியைப் பொறுத்தவரை, டேவிட் வோர்னர் இல்லாத நிலையில், கேமரூன் கிரீன் அந்த பணியை சிறப்பாக செய்கிறார். அவுஸ்ரேலியாவின் துடுப்பாட்ட வரிசை வலுவாக உள்ளது. குறிப்பாக டிம் டேவிட் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
அவுஸ்ரேலிய அணித்தலைவர் ஆரோன் பின்ஞ், தனது கடைசி ஒன்பது சர்வதேச போட்டிகளில் ஒரு 20 பிளஸ் ஓட்டங்களை மட்டுமே குவித்துள்ளார்.
போட்டியின் சூழ்நிலையைப் பொறுத்து, அவுஸ்ரேலியா இன்னும் இடது கை துடுப்பாட்ட வீரர்களை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
இரு அணிகளிலும் வலுவான வீரர்கள் உள்ளதால், போட்டியின் வெற்றி யார் பக்கம் சாயப் போகின்றது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்…