நாடாளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பெற்றுக்கொண்ட மதிய உணவு விசமானமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய உணவு மாதிரிகள் ஏற்கனவே அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் நேற்று நாடாளுமன்ற உணவு விடுதியில் இருந்து மதிய உணவு உண்டனர்.
இதன்போது ஏற்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக நாடாளுமன்ற வைத்திய நிலையத்தில் ஆரம்ப சிகிச்சை பெற்று வந்தவர்கள், நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் அதிகாரிகள் பெற்ற மதிய உணவில் கெட்டுப்போன மீன்கள் இருந்ததை அறிந்த சிற்றுண்டிச்சாலை பிரிவினர் அந்த மீன்களை அகற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
கெட்டுப்போன மீன்கள் எவ்வாறு உணவகத்திற்கு வழங்கப்பட்டது என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.