முன்னாள் அமெரிக்க உளவுத்துறை ஒப்பந்ததாரர் எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
72 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் நேற்று (திங்கட்கிழமை) கையெழுத்திட்டு வெளியிட்ட ஆணையில் எட்வர்ட் ஸ்னோவ்டனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
ஸ்னோவ்டனின் மனைவி, குழந்தை இருவரும் தற்போது நிரந்தர விசா பெற்றுள்ளனர்.
அவர்களுக்கும் விரைவில் ரஷ்யாவின் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஸ்னோவ்டனின் வழக்கறிஞர் அனடோலி குச்செரெனா, ஸ்னோவ்டனின் மனைவியும் ரஷ்ய குடியுரிமைக்கு விரைவில் விண்ணபிப்பார் என தெரிவித்தார். இந்த தம்பதியருக்கு 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
அதேவேளை, ஸ்னோவ்டன் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றவில்லை எனவும், ஆகவே கடந்த வாரம் ஜனாதிபதி புடின் அறிவித்த ஒரு பகுதி அணிதிரட்டலின் ஒரு பகுதியாக அவர் அழைக்கப்பட மாட்டார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலையில், ரஷ்ய குடியுரிமை வழங்கப்படுவது குறித்து அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை
அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவரகத்தின் முன்னாள் ஒப்பந்ததாரரான ஸ்னோவ்டன், அரசாங்க கண்காணிப்பு திட்டங்களை விவரிக்கும் ரகசிய ஆவணங்களை கசியவிட்டதால், அமெரிக்காவில் வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக 2013ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவில் வசித்து வருகிறார்.
அவருக்கு 2020ஆம் ஆண்டு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது. மேலும் அவர் தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடாமல் ரஷ்ய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளதாக அப்போது கூறினார்.
பிற நாடுகளின் அரசு செயற்பாடுகளையும், சொந்த நாட்டு மக்களையும் அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து இரகசியமாகக் கண்காணித்து வருவதை அவர் உலகுக்கு பகிரங்கப்படுத்தியதால், அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஸ்னோவ்டனை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா, ரஷ்யாவிடம் பலமுறை கோரியது. ஆனாலும் அது மறுக்கப்பட்டது.
ரஷ்யாவில் குறைந்த சுயவிபரத்தை வைத்து, சமூக ஊடகங்களில் ரஷ்ய அரசாங்கத்தின் கொள்கைகளை அவ்வப்போது விமர்சித்த எட்வர்ட் ஸ்னோவ்டன், நியாயமான விசாரணைக்கு உத்தரவாதம் அளித்தால், அமெரிக்காவிற்குத் திரும்பத் தயாராக இருப்பதாக 2019ஆம் ஆண்டு கூறினார்.