அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அறிவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துச் செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அரச இரகசிய சட்டத்தின் இரண்டாம் பிரிவில் ஜனாதிபதியினால் கொழும்பில் சில இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அண்மையில் அறிவிக்கப்பட்டன.
நாடாளுமன்ற கட்டடத்தொகுதியை அண்மித்த பிரதேசம், உயர் நீதிமன்ற வளாகம், மேல் நீதிமன்ற வளாகம், கொழும்பு நீதவான் நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களத்தை அண்மித்த பிரதேசம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை கடற்படை தலைமையகம், பொலிஸ் தலைமையகத்தை அண்மித்த பகுதிகள், அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டிருந்தன.
அக்குரகொட பாதுகாப்பு அமைச்சு, இராணுவ தலைமையகம், விமானப்படை தலைமையகம், பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை, பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைத்தளபதிகளின் வீடுகள் அமைந்துள்ள பிரதேசங்கள் என்பனவும் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்ததுடன், நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.