ஜெனிவா கூட்டத் தொடர் காலப்பகுதியில் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன் நிகழ்ந்த இழுபறிகளுக்குள் தமிழ்மக்களின் கவனம் திசை திருப்பப்பட்டிருக்கிறது.
ஜெனிவா கூட்டத் தொடரானது தமிழ் மக்களுக்கு மோட்சத்தை பெற்று தராது என்பது கடந்த 13 ஆண்டு கால அனுபவம்.ஆனால் அக்கூட்டத்தொடர் காலகட்டத்தில் வந்த ஒரு நினைவு நாளை நீதிக்காக போராடும் ஒரு மக்கள்கூட்டம் எவ்வாறு வடிவமைத்திருந்திருக்க வேண்டும்?
தமிழ் மக்களைப் பொறுத்தவரை நினைவு கூர்தல் என்பது ஒரு கூட்டுத் துக்கத்தை கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்றும் ஒரு நிகழ்வுதான். தமிழ் மக்களை ஓர் உணர்ச்சிகரமான புள்ளியில் நினைவு நாட்கள் இணைகின்றன. எனவே தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதற்குரிய உச்சபட்ச வாய்ப்புகளை நினைவு நாட்கள் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு நினைவு நாட்களில் தமிழ் மக்களின் கூட்டுத் துக்கத்தையும் கூட்டு இழப்பையும் கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்றினால் அது நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்திற்கு பிரதான உந்து விசையாக மாறும். இதை இன்னும் தெளிவாகச் சொன்னால்,நினைவு கூர்தல் எனப்படுது, நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியாக கட்டமைக்கப்பட வேண்டும்.
இதில்,திலீபனின்நினைவுகள் ஒப்பீட்டளவில் வித்தியாசமானவை. அப்படித்தான் அன்னை பூபதியின் நினைவுகளும். திலீபனும்,அன்னை பூபதியும் தங்களை வருத்தி உயிர் துறந்தார்கள்.அவ்வாறு தமது லட்சியத்துக்காக,தமது கோரிக்கைகளுக்காக தங்களை வருத்திய ஒருவரை நினைவுகூரும் பொழுது அதை எப்படித் திட்டமிட வேண்டும்? குறிப்பாக திலீபன் குடல் அறுவைச் சிகிச்சை ஒன்றின்மூலம் குடலின் ஒரு பகுதி அகற்றப்பட்டிருந்த நிலையில், அவருடைய உடல் உண்ணாவிரதத்தைத் தாங்காது என்பதை நன்கு தெரிந்திருந்தும் அவர் அந்த முடிவை எடுத்தார். அன்னை பூபதி முப்பது நாட்கள் பசியோடு இருந்தார்.அவர் நீரை அருந்தி உணவை ஓறுத்தார்.ஆனால் திலீபன் உணவையும் நீரையும் ஒறுத்தார்.அதனால் ஏற்கனவே பலவீனமாக இருந்த அவருடைய உடல் 12 நாட்களே தாக்குப்பிடித்தது.எனவே அந்த 12 நாட்களும் எப்படிப்பட்ட சித்திரவதையாக இருந்திருக்கும் என்பதனை அவரை உண்மையாக நினைவுகூர முற்படும் எவரும் அறிவர்.இந்த அடிப்படையில் அந்த நாளை எப்படித் திட்டமிட்டு நினைவு கூர்ந்து இருந்திருக்க வேண்டும்?
நீதிக்காக போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் பெயரால் உலக சமூகம் ஜெனிவாவில் ஓர் அரங்கை திறந்து,கூட்டத் தொடரை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, திலீபனின் நினைவுகளை நீதிக்கான பயணத்தின் ஒரு பகுதியாக அனுஷ்டித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அனுஷ்டிக்க முடியாதபடி ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் ஒரு நினைவுத் தூபியை அசிங்கப்படுத்தியிருக்கின்றன.
இப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது என்றுதான் ஏற்கனவே அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலர் முயற்சித்தார்கள்.ஆனால் எல்லாருடைய கையையும்மீறி திலீபன் நினைவு நாட்களின் இறுதி நாளில் அரசியல்வாதிகளும் செயல்பாட்டாளர்களும் தள்ளுமுள்ளுப்படும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
அது தமிழ் சமூகத்தில் காணப்படும் பாரதூரமான ஒரு வெற்றிடத்தை காட்டுகின்றது.அது என்னவெனில், இதுபோன்ற நிலைமைகளின்போது கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளைக் கடந்த ஓர் ஐக்கியத்தை கட்டி எழுப்பவல்ல குடிமக்கள் சமூகங்கள் எவையும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என்பதைத்தான். மணிவண்ணன் உருவாக்கிய கட்டமைப்பில் ஒப்பீட்டளவில் தமிழ் பரப்பில் துரத்திக் கொண்டு தெரியும் செயற்பாட்டாளர்கள் காணப்பட்டார்கள்.ஆனால் அவர்களில் யாருமே அரசியல்வாதிகளை கட்டுப்படுத்தும் சக்தி உடையவர்கள் அல்ல என்பதைத்தான் திலீபனின் நினைவுத் தூபிக்கும் முன் நடந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
அவ்வாறு பலமான குடிமக்கள் சமூகங்கள் இல்லாத ஒரு வெற்றிடத்தில்,இனிவரக்கூடிய நினைவு நாட்களைப் பொறுத்தவரை இது போன்ற மோதல்களுக்கான நிலைமைகள் மேலும் அதிகரிக்கக்கூடுமா?
ஏற்கனவே முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு உருவாக்கப்பட்ட ஒரு பொதுக் கட்டமைப்பு உண்டு.எனினும் அக்கட்டமைப்பு தொடர்பாக கேள்விகளும் உண்டு. அப்பொதுக் கட்டமைப்பு தமிழ் சமூகத்தை முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. பொதுக் கட்டமைப்பில் உள்ள எல்லோரும் ஒன்று கூடி முடிவுகளை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. முள்ளிவாய்க்கால் நினைவு நாளை ஒரு கிராமத்துக்குள், மிகச் சில செயற்பாட்டாளர்களுக்குள் குறுக்கக் கூடாது என்ற கவலை பரவலாக உண்டு.
இவ்வாறான விமர்சனங்களின் பின்னணியில் இனிமேல் திலீபனின் நினைவு நாட்கள் பொறுத்தும் ஒன்றுக்கு மேற்பட்ட ஏற்பாட்டுக் குழுக்கள் இயங்கப் போகின்றனவா?
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் அணி கூறுகிறது தாங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக நினைவேந்தலுக்கான ஓர் ஏற்பாட்டுக் குழுவை உருவாக்கி வைத்திருப்பதாக.அதற்கு முன்னால் இயக்கத்தவராகிய பொன் மாஸ்டர் பொறுப்பு என்றும் அத்தரப்பு கூறுகிறது. அப்படி ஒரு ஏற்பாட்டுக் குழு இருக்கத்தக்கதாக ஏன் மணிவண்ணன் ஒரு புதிய ஏற்பாட்டு குழுவை உருவாக்க வேண்டும் என்ற ஒரு வாதத்தை அவர்கள் முன் வைக்கிறார்கள்.
ஆனால் கஜேந்திரகுமார் அணியின் ஏற்பாட்டு குழு அவ்வாறு ஆறு ஆண்டுகள் இயங்கவில்லை என்று எதிர் தரப்பு கூறுகிறது. தவிர அது ஒரு பொது ஏற்பாட்டு குழுவல்ல என்றும்,அது ஒரு கட்சியின் ஏற்பாட்டுக் குழுவே என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
மாறாக மணிவண்ணன் உருவாக்கிய பொதுக் கட்டமைப்பானது,அதை உருவாக்கியது மணிவண்ணன் என்பதற்கும் அப்பால் பொதுத்தன்மை மிக்கது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதில் இணைப்பாளராக காணப்பட்ட பார்த்திபன் ஏனைய உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அதிலிருந்து விலகிவிட்டார்.எனவே அதில் கட்சி உறுப்பினர்கள் யாரும் இருக்கவில்லை என்றும் அப்பொது ஏற்பாட்டுக் குழு கூறுகிறது.
ஆனால் இந்த விளக்கத்தை கஜன் அணி ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் விளைவுதான் திலீபனின் தூபிக்கு முன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு.
அதாவது நடைமுறையில் இரண்டு ஏற்பாட்டுக் குழுக்கள் செயற்பட்டன என்பதே உண்மை நிலை.இதில் கஜன் அணியின் ஏற்பாட்டுக் குழு மணிவண்ணன் உருவாக்கிய பொது ஏற்பாட்டுக் குழுவை எதிர் நிலைக்கு தள்ளியது என்றும், கடைசி நாளன்று அந்தப் பகுதியை அவர்கள் கைப்பற்றி வைத்திருந்தார்கள் என்றும், அதற்குள் ஏனையவர்கள் உள் நுழைவதை கட்டுப்படுத்தினார்கள் என்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அவ்வாறு கஜன் அணியின் ஏற்பாட்டு குழு நினைவுத்தூபியை கைப்பற்றி வைத்திருந்த காரணத்தால்தான் காவடிகள் வந்து சேர்ந்ததும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
ஆனால் காவடிகள் வரப்போவதையும், அவை நிலைமைகளைக் குழப்பும் உள்நோக்கம் உடையவை என்பதையும் முன்னூகித்த காரணத்தால்தான் கஜன் அணி நினைவுத்தூபியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது என்று ஒரு விளக்கம் முன்வைக்கப்படுகிறது.
இதில் எது சரியான விளக்கம் என்ற விவாதங்களுக்கும் அப்பால், திலீபன் நினைவு நாள் பொறுத்து இரண்டு ஏற்பாட்டு குழுக்கள் செயல்பட்டன என்பதே நடைமுறை உண்மையாக இருந்தது.இனிவரும் காலங்களிலும் நினைவு நாட்கள் பொறுத்து அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட ஏற்பாட்டுக் குழுக்கள் தோன்றக்கூடிய வாய்ப்பு உண்டா?
ஏற்கனவே பல கட்சிகளாக, பல செயற்பாட்டு அமைப்புக்களாக,பல நினைவு நாட்களாக,காணாமல் போனவர்களுக்கான அமைப்புகளாக, பிளவுண்டிருக்கும் ஒரு சமூகமானது,இப்பொழுது நினைவுகூர்தல் பொறுத்தும் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டமைப்புகளாக பிளவுபடப்போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதா? எல்லாவற்றிற்கும் ஆளுக்கு ஒரு அமைப்பை கட்டி வைத்திருக்கும் தமிழ்ச் சமூகம், நினைவு கூர்தல் பொறுத்தும் அவ்வாறு பல ஏற்பாட்டுக் குழுக்களை கட்டியெழுப்பப் போகின்றதா?
அதாவது தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரளும் வாய்ப்புகள் மேலும் பலவீனமடைகின்றன என்று பொருள்.அரசியலில் மிகவும் உணர்ச்சிகரமான நினைவு கூர்தல் பரப்பிலேயே ஒன்றாகத் திரள முடியாத மக்கள்,பிறகு எந்த விடயத்தில்தான் ஒன்றாகத் திரளப் போகிறார்கள்? ஒன்றாகத் திரண்டு தங்களுக்கான நீதியை எப்பொழுது பெறப்போகின்றார்கள்?எப்படிப் பெறப்போகின்றார்கள்?