ஜப்பானின் வடக்குப் பகுதியின் மீது வட கொரியா, பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி 07:29 மணிக்கு ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து வெளியான எச்சரிக்கையில், ஹொக்கைடோ தீவில் உள்ள மக்களுக்கு விமானம் மற்றும் ரயில் பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
வடகிழக்கு ஹொக்கைடோ மற்றும் அமோரி பகுதிகளில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
ஜப்பானில் இருந்து சுமார் 3,000 கிமீ (1,860 மைல்) தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை விழுந்ததாகவும், இது தொடர்பாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானிய கடலோரக் காவல்படை மற்றும் தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்களால் கண்டறியப்பட்ட ஏவுகணை, 4,500 முதல் 4,600 கிமீ (2,800-2,850 மைல்கள்) வரை அதிகபட்சமாக 1,000 கிமீ (620 மைல்கள்) உயரத்திற்கு பறந்ததாக தெரிவித்தனர்.
சீனாவுடனான எல்லைக்கு அருகே நாட்டின் வடபகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஆயுதம், பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு சுமார் 22 நிமிடங்கள் வானில் பறந்தது.
ஜப்பானின் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இந்த நடவடிக்கைகளை கடுமையாகக் கண்டித்து, ஏவுதலை வன்முறை நடத்தை என்று விபரித்தார். மேலும் ஜப்பானிய அரசாங்கம் அதன் தேசிய பாதுகாப்பு சபையின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
எந்தவொரு முன் எச்சரிக்கையும் ஆலோசனையும் இன்றி மற்ற நாடுகளை நோக்கி ஏவுகணைகளை பறக்கவிடுவது சர்வதேச விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது.
கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பான் மீது வடகொரியா ஏவுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.