தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை 15,000 ரூபாயாக அதிகரிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக தேயிலை சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் கொடுப்பனவு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில்,பெரும்பாலான பெருந்தோட்ட நிறுவனங்களால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 5,000 ரூபாய் வழங்கப்பட்டுவந்ததாகவும் எனினும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தீபாவளி பண்டிகையை கொண்டாட அந்தத் தொகை போதுமானதல்ல என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எனவே, எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் தீபாவளி முற்பணத்தை 15000 ரூபாய் வரை அதிகரிப்பது பொருத்தமாக இருக்கும் என தான் பரிந்துரைப்பதாக சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.