மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டு முக்கியஸ்தர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர் குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் கே.டி.லால்காந்த ஆகியோர் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஜூலை 09ஆம் திகதி போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் லால்காந்த ஆகிய இருவரும் சகல நாடாளுமன்ற விவகாரங்களையும் பலவீனப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கு பொதுமக்களை தூண்டும் வகையில் செயற்பட்டனர் என ஜனாதிபதி தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
இது தொடர்பில் இதுவரையில் விசாரணைகள் நடத்தப்படவில்லை என கூறிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, இது தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்குமாறு சபைத் தலைவர் பிரசன்ன ரணதுங்கவிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், சமூக ஊடகங்கள் ஊடாக பொதுமக்களை தூண்டிவிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் மக்கள் விடுதலை முன்னணியின் குறித்த இரண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.