முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரி ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனம் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுக்களை இன்று (வெள்ளிக்கிழமை) பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்மனுதாரர்கள் எடுத்த முக்கிய பொருளாதார முடிவுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராகவே, இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அமைச்சர்கள் அமைச்சரவை, இலங்கை நாணய சபை, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள், பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் அஜித் நிவாட் கப்ரால், திறைசேரியின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி, தற்போதைய நாணய சபை உறுப்பினர்களான எஸ்.எஸ்.டபிள்யூ. குமாரசிங்க ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.