பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய பேரவையின் உப குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி உபகுழுவின் முதலாவது கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
தலைவர் பதவிக்கு பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பெயர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவினால் முன்மொழியப்பட்டது. அதனை நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் நசீர் அஹமட் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.
தேயிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்தல், பால் உற்பத்தியை அதிகரித்தல், விவசாயத்தை மறுசீரமைத்தல், உர உற்பத்தி, சுற்றுலாத் தொழில் போன்ற நாட்டின் எதிர்காலப் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழுவின் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்களுடன் கலந்துரையாடி ஒவ்வொரு துறை தொடர்பான பொருளாதார அபிவிருத்தி முன்மொழிவுகளை உள்ளடக்கிய அறிக்கையை 20ஆம் திகதி தேசிய பேரவைக்கு சமர்ப்பிக்கவும் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
இதன்படி, அந்நியச் செலாவணி விவகாரங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான நிபுணர்களையும் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளையும் எதிர்வரும் 13ஆம் திகதி குழுவின் முன் அழைத்து கருத்துக்களைப் பெறுவதற்கு உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
மேலும் உணவு, சுகாதாரம், போக்குவரத்து, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரும் 14ம் திகதி அழைத்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்கும் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய போரவை உபகுழுவின் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 19ஆம் திகதி நடத்துவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
அமைச்சர் நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர்களான சிசிர ஜயக்கொடி மற்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, எம்.ராமேஸ்வரம், மனோ கணேசன், ஏ.எல்.எம்.அதாஉல்லா, ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி ஜயதிலக ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
தேசிய பேரவையின் மற்றொரு உப குழுவான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.