மத்திய வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 22பேர் உயிரிழந்தனர் மற்றும் கனமழையால் ஆறு பெருக்கெடுத்து ஓடியதால் 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்று துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெனிசுவேலாவில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமானது. இது சமீபத்திய மாதங்களில் வரலாற்று மழை அளவைக் கண்டது.
1999ஆம் ஆண்டில், கராகஸின் வடக்கே உள்ள வர்காஸ் மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளில் சுமார் 10,000பேர் உயிரிழந்தனர்.
கனமழையால் சான்டோஸ் மிச்செலினா நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் லாஸ் தெஜேரியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அவற்றின் 5 கால்வாய்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அரகுவா என்ற மத்திய மாகாணத்தின் வடக்கே நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ, அவசரகால நிலையை பிறப்பித்து உட்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு முகமைகளை சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டு உள்ளார்.
இதன்படி, மீட்பு மற்றும் நிவாரண பணியில் தேசிய பேராபத்து மேலாண் அமைப்பு மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.
வெனிசுவேலாவில் பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக துணை நிற்கும் வகையில் நாட்டில் 3 நாட்கள் தேசிய அளவில் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்றும் ஜனாதிபதி மதுரோ அறிவித்துள்ளார்.