இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் காபன் குறைப்பு கூட்டுப் பொறிமுறையை நடைமுறைப்படுத்தும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.
சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
அதனை தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினை சந்தித்த ஜப்பான் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
புவி வெப்பமடைவதற்கு காரணமான பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்காக உலகளாவிய ரீதியில் ‘கியோத்தோ’ அமைப்பு நிறுவப்பட்டது.
இந்த அமைப்பின் இரண்டாவது பதவிக் காலத்தின் போது ஜப்பான் அந்த அமைப்பிலிருந்து விலகிக் கொண்டது.
அதனைத்தொடர்ந்து உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் பங்களிப்புச் செலுத்துவதற்காக 2013ஆம் ஆண்டளவில் காபன் அளவைக் குறைக்கும் இருதரப்பு கூட்டுப் பொறிமுறையொன்றை ஜப்பான் அறிமுகம் செய்தது.
வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளுடன் இணைந்து, பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும், குறைக்கப்பட்ட அளவை வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பகிர்ந்து கொள்வதற்கும் ஏற்ற வகையில் இந்த பொறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான சாசனத்துக்கமைய அதன் உறுப்பினர்களால் 21ஆவது மாநாட்டில் கைச்சாத்திடப்பட்ட ‘பெரிஸ்’ ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்ட தீர்மானங்களை தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்காகவே ஜப்பான் இந்த திட்டத்தை தயார் செய்துள்ளது.
இந்த திட்டம் தற்போது மங்கோலியா, பங்களாதேஷ், எதியோப்பியா, கென்யா, மாலைத்தீவு, வியட்நாம், லாவோஸ், இந்தோனேசியா, கோஸ்டரிகா, பலாவு, கம்போடியா, மெக்சிக்கோ, சவுதி அரேபியா, சிலி, மியான்மார், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய 17 நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம், வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் குறைக்கப்படும் காபன் உமிழ்வு அலகுகள் இரு நாடுகளுக்கும் இடையில் பகிரப்படும் வகையில் இந்த பொறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.