நீதிமன்றில் முன்னிலையான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குணசிங்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றில் தனது சட்டத்தரணிகள் ஊடாக முன்னிலையாகிய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை தினமும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சனத் நிஷாந்த நீதிமன்றில் முன்னிலை
நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதற்காக உடனடியாகக் கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது நீதித்துறை மற்றும் நீதவான்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வெளியிட்டதாகக் கூறி, நீதிச் சேவைகள் ஆணைக்குழு மற்றும் சட்டத்தரணிகள் பலர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதனையடுத்து, அவரை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் இன்று முற்பகல் அவர் நீதிமன்றில் முன்னிலையாகாததால், இராஜாங்க அமைச்சரை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.