எந்நேரத்தில் வேண்டுமானாலும், தேர்தலை எதிர்கொள்வதற்கு பொதுஜன பெரமுன தயாராகவே உள்ளது என்றும் நாவலப்பிட்டிய தொகுதியிலும் வெற்றிக்கொடி பறக்கும் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஏற்பாட்டில் பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டிய தொகுதி ஆசனக் கூட்டம் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்றது
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மஹிந்தானந்த அளுத்கமகே, “இன்று நடைபெறும் கூட்டம் மாவட்டக் கூட்டம் அல்ல, ஒரு தொகுதி கூட்டமாகும். ஆனாலும் மக்கள் அணிதிரண்டுள்ளனர்.
தாங்கள் இன்னமும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன்தான் நிற்கின்றோம் என்ற தகவலை அவர்கள் வழங்கியுள்ளனர். ஒரு சிலர் எம்மைவிட்டு சென்றிருக்கலாம். ஆனால் சக்தி சக்தி பலமாகவே உள்ளது.
நாவலப்பிட்டியவில் நடைபெறும் கூட்டத்தை குழப்ப வேண்டும், மக்களின் வருகையை தடுக்க வேண்டும் என்பதற்காக நாவலப்பிட்டியவில் எதிர்ப்பு போராட்டத்தை நடத்துமாறு தொகுதி அமைப்பாளருக்கு ஆணையிட்டுள்ளார்.
சமூகவலைத்தளங்களிலும் பாரிய பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் 148 பேர் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கண்டியில் இருந்தும் ஆட்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்கு அஞ்சும் கட்சி எமது கட்சி அல்ல. எந்நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயார். கண்டி மாவட்டமும், நாவலப்பிட்டிய தொகுதியும் தயார் என்ற செய்தி இக்கூட்டம்மூலம் வழங்கப்படுகின்றது. தேர்தல் நடத்தப்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவருகின்றன. சவால்களை ஜனாதிபதி சிறப்பாக எதிர்கொள்கின்றார். அடுத்த இரு வருடங்களுக்கு அவருக்கு ஆதரவு வழங்கப்படும். தவறுகளை திருத்திக்கொண்டு எமது கட்சி வெற்றிநடைபோடும்” என்றார்.