பொருளாதார நெருக்கடியை போக்க அரசாங்கம் உடனடியாக செயற்படாவிட்டால் லெபனானில் ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கையிலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரித்தானிய ரீடிங் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சாந்த ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
லெபனான் மற்றும் இலங்கையின் நிலைமையை ஒப்பிட்டு அவர் எழுதிய நீண்ட கட்டுரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கட்டுரையில், ”லெபனானின் வங்கி அமைப்பு காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. காரணம், வங்கிகள் வாடிக்கையாளர்களின் சேமிப்புத் தொகையை செலுத்த முடியாமல் திணறுகின்றன.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் வங்கிகளை கொள்ளையடிக்கவும், வங்கி ஊழியர்களை பணயக்கைதிகளாக பிடிக்கவும் தொடங்கியுள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு அரசு பாதுகாப்பு அளிக்க முடியாததால், உறுப்பினர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு வங்கிகளை மூட வங்கி சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இதனால், பணத்தை வைப்பிலிட்டவர்கள் தங்கள் வங்கிகளில் நம்பிக்கை இழக்கும்போது, அவர்களது பணம் அனைத்தும் மணிநேரங்கள் அல்லது நாட்களுக்குள் திரும்பப் பெறப்படும். இதை ஆங்கிலத்தில் Bank Runs என்பார்கள். அதுதான் லெபனானில் நடந்தது. வங்கிகளில் பணப்புழக்கம் இல்லாதபோது, அது முழு நிதி அமைப்பையும் பாதிக்கிறது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய பரிந்துரைகளில் இந்த ஆபத்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரையை அடுத்து, இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரச வங்கியின் 20வீத பங்குகளை விற்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்தார்.
வங்கிகளின் மூலதனத்தை அதிகரிப்பதில், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும். இல்லையெனில், அரசு வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கான முதல் படியாக இது இருக்கலாம்.
லெபனானின் 6.5 மில்லியன் மக்களில் 80% பேர் தற்போது வறுமையின் அடிமட்டத்தில் உள்ளனர். இந்நாட்டு அரசால் இதுவரை மக்களின் அடிப்படைத் தேவைகளை வழங்க முடியவில்லை.
லெபனானில் 23 மணி நேரமும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உணவுகூட வழங்க முடியவில்லை.
ஆட்சியாளர்களின் திருட்டு, ஊழல், பணமோசடி, நிதி ஒழுக்கமின்மை என்பனவே, இவை அனைத்திற்கும் காரணம் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டுகிறது.
இலங்கையின் தற்போதைய நிலைமை அதற்கு மிக அருகில் இல்லையா? இது வரை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் உற்பத்திப் பொருளாதாரம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார்கள், ஆனால் அதை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.
மாறாக, இறக்குமதி செய்து நாட்டு மக்களை திருப்திப்படுத்துவதன் மூலம் தங்கள் கைக்கூலிகளின் பைகளை நிரப்ப முயன்றனர்.
தொடர்ச்சியான நிபந்தனைகளின் கீழ் லெபனானுக்கு 3 பில்லியன் டொலர் கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புக் கொண்டுள்ளது.
அவர்கள் முன்வைத்துள்ள நிபந்தனைகளின் தொடரில் உள்ள நிபந்தனைகளில் ஒன்று ஊழலைத் தடுப்பது.
லெபனானின் காபந்து அரசாங்கம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது, ஆனால் அவர்களால் இது வரை நிலையான அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை.
அதன் காரணமாக IMF வழங்கிய விரிவாக்கப்பட்ட நிதி வசதியை 4 ஆண்டுகளாக அவர்களால் பெற முடியவில்லை. இதனால், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கும் லெபனானின் பொருளாதார நெருக்கடிக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம்.
வெளிநாட்டுப் பணம் பெறப்படாததால், இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது.
சுற்றுலாத்துறை முற்றிலுமாக நலிவடைந்துள்ளதால் டொலர்கள் வருவதில்லை என முறைப்பாடுகள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் கடன் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு) 100.9 பில்லியன் டொலர்கள் ஆகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் மறைமுக வரிகளை அதிகரித்துள்ளது. எரிபொருள் மானியங்கள் நீக்கப்பட்டு அவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஆனால் ஊழலைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊழலைத் தடுக்க வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.