ரி-20 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரின், குழு ஏ- ஆறாவது தகுதி லீக் போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
ஜீலோங் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை அணியும் ஐக்கிய அரபு அமீரகமும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஐக்கிய அரபு அமீரக அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக பெத்தும் நிஸங்க 74 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஐக்கிய அரபு அமீரக அணியின் பந்துவீச்சில், மெய்யப்பன் ஹெட்ரிட் விக்கெட்டும் ஸாவுர் கான் 2 விக்கெட்டுகளையும் அப்சல் கான் மற்றும் ஆர்யன் லக்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 153 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி, 17.1 ஓவர்கள் நிறைவில் 73 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இலங்கை அணி 79 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அப்சல் கான் 19 ஓட்டங்களையும் ஜூனைத் சித்திக் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், துஸ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் மகேஷ் தீக்ஷன 2 விக்கெட்டுகளையும் பிரமோத் மதுஷான் மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 60 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக 74 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பெத்தும் நிஸங்க தெரிவுசெய்யப்பட்டார்.
எதிர்வரும் 20ஆம் திகதி நெதர்லாந்து அணியை எதிர்கொள்ளும் இலங்கை அணி, அப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் பிரதான உலகக்கிண்ண தொடரின் போட்டிகளுக்குள் நுழையும்…