வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து பருத்தித்துறை பகுதியில் தங்கியுள்ள 76 குடும்பங்களுக்கு பலாலி அந்தோணிபுரம் பகுதியில் காணப்படும் 13 ஏக்கர் அரச காணியை பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளராக இணைக்கப்பட்டுள்ள இ. இளங்கோவனின் பங்கேற்புடன் பலாலி இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலையே அவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த 13 ஏக்கர் காணி இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படுகின்றன. அவற்றினை விடுவிக்க பலாலி இராணுவ தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனாலும் இறுதி முடிவு தேசிய பாதுகாப்பு சபை தான் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை , யாழ்.மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து , 872 ஏக்கர் காணி பல கட்டங்களில் விடுக்கப்பட்டுள்ளது எனவும் , இன்னமும் 3ஆயிரத்து 27 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட வேண்டி உள்ளது என மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்தார்.
இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள 3ஆயிரத்து 27 ஏக்கர் காணியில், ஆயிரத்து 617 ஏக்கர் காணியினை இராணுவத்தினருக்கு சுவீகரிப்பதற்கு காணி அமைச்சின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.