உக்ரைனிய தாக்குதலுக்கு முன்னதாக உக்ரைனின் தெற்கு கெர்சன் பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் வெளியேற்றப்படுகிறார்கள் என்று ரஷ்யாவால் நிறுவப்பட்ட உள்ளூர் தலைவர் விளாடிமிர் சால்டோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அனைத்து துறைகளும் அமைச்சகங்களும் டினீப்பர் ஆற்றைக் கடக்கும் என்று விளாடிமிர் சால்டோ மேலும் கூறினார்.
சுமார் 50-60,000 பொதுமக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட, படிப்படியான இடப்பெயர்ச்சியில் வெளியேறுவார்கள் என்று அவர் முன்பு கூறியிருந்தார்.
கெர்சன் பிராந்தியத்தில் நிலைமை மிகவும் கடினமாக மாறியுள்ளது என உக்ரைனில் உள்ள ரஷ்யப் படைகளின் தளபதி கூறியிருந்த நிலையில், தற்போது அப்பகுதியில் உக்ரைனிய துருப்புக்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கெர்சன் பகுதியில் இருந்து பொதுமக்களை ரஷ்ய அதிகாரிகள் விரைவாக வெளியேற்றி வருகின்றனர்.
இதனிடையே, ரஷ்ய வெளியேற்று நடவடிக்கையை புறக்கணிக்குமாறு உக்ரைன், குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ரஷ்யா பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்து மனித கேடயங்களாக பயன்படுத்த விரும்புவதாக கெர்சன் பிராந்திய நிர்வாகத்தின் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரஷ்ய தொலைக்காட்சி காட்சிகள் நேற்று (புதன்கிழமை) டினீப்பரின் மேற்குக் கரைக்கு அருகில் ஏராளமான மக்கள் கூடுவதைக் காட்டியது. அவர்கள் படகுகளுக்காக வரிசையில் நின்றதால், எத்தனை பேர் வெளியேறுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.