உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப், ஊக்கமருந்துசோதனையில் தோல்வியடைந்ததையடுத்து அவர் டென்னிஸில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில், விளையாடிய அவர் இரத்த சோகைக்கு எதிரான மருந்தான ரொக்ஸாடுஸ்டாட்டிற்கு நேர்மறை சோதனை செய்ததாக சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாடு முகவரகம் அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து, சிமோனா ஹாலெப் டென்னிஸில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாடு முகவரகம் தெரிவித்துள்ளது.
இந்த பொருள் 2022 உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை (வாடா) தடைசெய்யப்பட்ட பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது.
சிறுநீரக செயலிழப்பால் ஏற்படும் இரத்த சோகை அறிகுறிகளை குணப்படுத்த ஐரோப்பிய ஒன்றிய மருத்துவ அங்கீகாரம் பெற்ற மருந்து ரொக்ஸாடுஸ்டாட் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து முகமையின் கூற்றுப்படி, இது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் மற்றும் அதிக சகிப்புத்தன்மையை உருவாக்கும் இயற்கை ஹார்மோன் எரித்ரோபொய்டின் அல்லது எரித்ரோபொய்டினை அதிகமாக உற்பத்தி செய்ய உடலைத் தூண்டுகிறது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த 31 வயதான ஹாலெப், ‘தனது வாழ்க்கையின் மிகப்பெரிய அதிர்ச்சி. இன்று என் வாழ்க்கையின் கடினமான போட்டி தொடங்குகிறது. உண்மைக்கான போராட்டம். ரொக்ஸாடுஸ்டாட் என்ற பொருளுக்கு நான் மிகக் குறைந்த அளவில் சோதனை செய்ததாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
முன்னாள் உலகின் 11ஆம் நிலை வீராங்கனையான அலிஸ் கார்னெட் தனது ஆதரவை சிமோனா ஹாலெப்பிற்கு வழங்கியுள்ளார். ‘இந்த சண்டையில் அவர் வெற்றி பெறுவார்’ என்று கூறினார்.
ஹாலெப் ஊக்கமருந்து செய்தி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனான ஹாலெப், ஒருபோதும் ஏமாற்றும் வீரராகத் தெரியவில்லை என்று பலர் கூறியுள்ளனர்.