கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் 22 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முதல் நாள் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் ஒன்றை வெளியிட்டார்.அது கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சட்டமூல வரைபு தொடர்பானது.
அச்சட்ட மூல வரைபு புனர்வாழ்வு பணியகத்துக்கானது.அதை சவால்களுக்கு உட்படுத்தி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தையே சபாநாயகர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
புனர்வாழ்வு பணியகச் சட்டமூல வரைபில் சில பகுதிகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று உச்ச நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது.
மேற்படி சட்டமூல வரைபை நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் அரசியல்வாதிகளும் மனித உரிமைக் காவலர்களும் கடுமையாக எதிர்த்து வந்தார்கள். சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி மேற்படி சட்டமூல வரைவு தொடர்பாக பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார். “இலங்கை அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட புனர்வாழ்வு முயற்சிகள் குற்றம்சாட்டப்படாமல் தடுப்புக்காவலில் வைப்பதற்கான துஸ்பிரயோக நடவடிக்கையாக தோன்றுகின்றதே தவிர வேறொன்றுமில்லை”
இச்சட்டமூலமானது போதைப்பொருள் பாவனையாளர்கள், முன்னாள் இயக்கத்தவர்கள், வன்முறை தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள், ஏனைய குழுக்களை சேர்ந்தவர்கள் ஆகியோரை கட்டாயமாக புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைப்பதற்கு அனுமதிக்கும் என்று கூறப்பட்டது. பாதுகாப்பு அமைச்சினால் கட்டுப்படுத்தப்படும் புனர்வாழ்வு பணியகங்களிற்கான புதிய நிர்வாக கட்டமைப்பை இச்சட்டமூலம் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது
எனினும்,உச்ச நீதிமன்றம் இச்சட்டமூல வரைபில் சில பகுதிகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று வியாக்கியானம் செய்திருக்கிறது.இச்சட்ட மூல வரைபில் காணப்படும் முன்னாள் போராளிகள்,போராட்டக் காரர்கள்,வன்முறையாளர்கள்’ஆகிய சொற்பதங்கள் நீக்கப்பட்டு போதைப்பொருள் பாவனையாளர்கள் என்ற சொற்பதமே உள்வாங்கப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தனது வியாக்கியானத்தில் தெரிவி த்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
இச்சட்டமூல வரைபின்படி ஒருவரை நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமலேயே புனர்வாழ்வுக்கு அனுப்ப முடியும். ஆனால் அவ்வாறு ஒரு நபரை புனர்வாழ்விற்கு அனுப்புவதற்கான அடிப்படையை இச்சட்டமூலவரைபு விபரிக்கவில்லை என்று சுட்டிக் காட்டப்பட்டது.இதில் வன்முறை என்ற வார்த்தை வரைவிலக்கணப்படுத்தப்படவில்லை. இதனால் எதிர்காலத்தில் அது எப்படியும் வியாக்கியானம் செய்யப்படலாம்.பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்ள பயங்கரவாதம் என்ற சொல்லை வியாக்கியானப்படுத்துவதைப் போல என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இப்போதுள்ள ரணில்+தாமரை மொட்டு அரசாங்கம் இச்சட்டமூலத்தை கொண்டு வரவேண்டிய தேவை என்ன ? இனி ஒரு அரகலய தோன்றுவதை தடுப்பதுதான். ஒரு மூத்த வழக்கறிஞர் கூறுவது போல நடுத்தர வர்க்கம் புனர்வாழ்வுக்குப் பயந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாது என்று அரசாங்கம் சிந்தித்தது. இச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டிருந்திருந்தால் அரசாங்கத்துக்கு எதிராக போராடும் எவரையும் புனர் வாழ்வுப் பணியகம் குற்றவாளிகளாக கண்டு புனர்வாழ்வுக்கு அனுப்ப முடியும்.
உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தால் மேற்படி சட்டமூலம் இனி நிறைவேற்றப்படும் வாய்ப்புகள் அனேகமாக இல்லை என்று கருதப்படுகிறது. இது நாட்டில் நீதியை ஜனநாயகத்தை பலப்படுத்தியிருப்பதாக பொதுவாக ஒரு விளக்கம் கூறப்படுகிறது.
ஆனால் இந்த இடத்தில் தமிழ் மக்களின் அனுபவம் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். நீதிமன்றத்தின் கட்டளையின்றி நபர்களைப் புனர்வாழ்வுக்கு அனுப்பும் நடைமுறை என்பது தமிழ் மக்களுக்குப் புதியது அல்ல. ஏற்கனவே 2009 க்குப் பின் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அவ்வாறு புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.சிறு தொகையினர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் புனர் வாழ்வுக்கு அனுப்பப்பட்டார்கள்.அதைவிடப் பெரிய தொகையினர் நீதிமன்றத்தின் உத்தரவு இன்றி புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டார்கள்.அவர்கள் தாமாக முன்வந்து புனர்வாழ்வை ஏற்றுக் கொண்டார்கள்.
இங்கு புனர்வாழ்வு என்பது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவதற்கான ஒரு வழியாக காணப்பட்டது என்பதே உண்மையாகும். சந்தேக நபர்களின் சட்டத்தரணிகளும் அதை ஊக்குவித்தார்கள். பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் நீண்ட பல ஆண்டுகளாக காத்திருந்து தமது ஆயுளைத் தொலைப்பதை விடவும், தாமாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டு, தம்மை புனர்வாழ்வுக்கு அனுப்புமாறு, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்திடம் வேண்டுகோள் விடுத்த முன்னாள் புலிகள் இயக்கத்தவர்கள்,அவ்வாறு புனர் வாழ்வுக்கு அனுப்பப்பட்டார்கள்.
இதற்கு நிகரான மற்றொரு உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்டலாம். நாலா ம் கட்ட ஈழப் போரின் போது தமிழ்ப் பகுதிகளில் அடையாளம் காணப்படாத நபர்களால் கைது செய்யப்படுவதிகிருந்தும் கொல்லப்படுவதிலிருந்தும் தப்புவதற்காக மனித உரிமைகள் அலுவலகத்தில் சரணடையும் ஒரு போக்கு காணப்பட்டது. அவ்வாறு மனித உரிமைகள் அலுவலகத்தில் சரணடைவதன் மூலம் கொல்லப்படுவதில் இருந்து தப்பலாம் என்ற நிலை காணப்பட்டது. அனாமதேயமாகக் கொல்லப்படுவதை விடவும் மனித உரிமைகள் நிலையத்தில் சரண் அடைந்து அங்கே பாதுகாப்பாக இருக்கலாம் என்று நம்பியவர்கள் அவ்வாறு சரணடைந்தார்கள்.
அதுபோலவே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட ஆண்டுகள் வழக்காடுவதை விடவும், குற்றத்தை ஒப்புக்கொண்டு தாமாக முன்வந்து புனர்வாழ்வுக்குச் செல்வதன் மூலம் சில ஆண்டுகளில் வெளியே வந்து விடலாம் என்று பெரும்பாலானவர்கள் நம்பினார்கள்.
ஆனால் இந்தப் புனர்வாழ்வு நடைமுறையில் இருக்கும் அடிப்படை பிரச்சினை என்னவென்றால்,இது நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் வழங்கப்பட்ட புனர்வாழ்வு அல்ல. அது ஒரு தண்டனையும் அல்ல. எனவே புனர்வாழ்வு பெற்ற ஒருவர் அவர் போராட்டத்தில் ஈடுபட்ட காலகட்டத்தில் புரிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படக்கூடிய ஒரு நிலைமை எப்பொழுதும் உண்டு. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களும் உண்டு..யாழ் பல்கலைக்கழக மிருதங்கத்துறை விரிவுரையாளர் ஒருவரும் அவ்வாறு கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாகி பின்னர் மேல்முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
அதாவது முன்னாள் இயக்கத்தவர்களைப் பொறுத்தவரை புனர்வாழ்வு என்பது ஒரு விதத்தில் ஒத்திவைக்கப்பட்ட தண்டனைதான். புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்படுகின்றவர்கள் மீண்டும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படலாம். வாழ்க்கை பூராகவும் அவர்கள் பயந்து பயந்து வாழ வேண்டும். இது ஒரு பயங்கரமான நிலை. ஒரு நிச்சயமற்ற வாழ்க்கையை அவர்கள் எப்படி அனுபவிப்பது? இந்த அடிப்படையில் கூறின் நாட்டில் இப்போதுள்ள மிகவும் பாதிப்படையக்கூடிய – most vulnerable – ஒரு தரப்பாக அவர்கள் காணப்படுகிறார்கள்.
தமிழ்ப் போராளிகளைப் போலவே சிங்களப் போராளிகளும் அவ்வாறான ஒரு நடைமுறைக்கு உட்படக்கூடிய ஆபத்து மேற்படி புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தில் காணப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அதை அரசியலமைப்புப்புக்கு முரணானது என்று அறிவித்திருக்கிறது.
தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சிப் போராட்டங்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கையாள்வதற்கு சிங்கள மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது. குறிப்பாக கடந்த ஜெனிவா கூட்டத்தொடரின்போது புலம்பெயர்ந்த சிங்கள மக்கள் ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்தார்கள்.கடந்த 13 ஆண்டுகளில் ஜெனிவாவில் புலம்பெயர்ந்த சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிராகத்தான் ஆர்ப்பாட்டம் செய்வதுண்டு. ஆனால் இந்த முறை அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களைச் சமாளிப்பதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தன கைது செய்யப்பட்டவர்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்க மாட்டோம் என்ற தொனிப்பட வாக்குறுதியளித்திருந்தார்.
அவ்வாறு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அரகலய போராட்டக்காரர்களை கையாள முடியாத ஒரு சூழ்நிலையில் அரசாங்கத்துக்கு புனர்வாழ்வுப் பணியகச் சட்டமூலம் தேவைப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதற்கு அனுமதிக்கவில்லை. சட்டமூல வரைபில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய திருத்தங்களைச் செய்தால் அச்சட்டத்தை வைத்து மக்கள் எழுச்சிகளைக் கையாள முடியாது. 22 ஆவது திருத்தத்தின் மூலம் தன்னை ஜனநாயகத்தின் பாதுகாவலர் என்று காட்டிக் கொள்ள முற்படும் ரணில்,இனி அரகலயக்காரர்களை எப்படிக் கையாள முற்படுவார்?