ஒக்டோபர் மாதத்தின் முதல் 24 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 31 ஆயிரத்து 828ஐ எட்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இவ்வருடம் இதுவரை நாட்டிற்கு வந்த மொத்த சர்வதேச பார்வையாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 58 ஆயிரத்து 68ஆக உயர்ந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் பகிரப்பட்ட சமீபத்திய தற்காலிகத் தரவுகள், ஒக்டோபர் மாதத்திற்கான வாராந்த வருகையில் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.
ஒக்டோபர் 01-24ஆம் திகதி வரையில், இந்தியா, ரஷ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்தே அதிகளவானோர் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
ரஸ்யாவின் ஏரோஃப்ளோட் இலங்கைக்கு மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்ததன் காரணமாக ரஷ்ய பயணிகளின் வருகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் நவம்பர் முதல் மார்ச் 2023 வரையிலான காலகட்டத்தில் இலங்கைக்கான 75 சதவீத பயணச்சீட்டுக்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏரோஃப்ளோட் நிறுவனம் தெரிவித்துள்ளது.