ரி-20 உலகக்கிண்ணத் தொடரின், சுப்பர்-12 சுற்றின் குழு-2இல் நடைபெறும் தொடரின் 17ஆவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி, பங்களாதேஷ் அணிக்கு 206 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
சிட்னியில் தற்போது நடைபெற்று வரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரீலே ரொஸ்சவ் 109 ஓட்டங்களையும் குயிண்டன் டி கொக் 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், சகில் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் டஸ்கின் அஹமட் மற்றும் அபீப் ஹொசைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
தற்போது 206 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.
நடப்பு தொடரில் இதுவரையில் போட்டிகளின் அடிப்படையில், அணியொன்று பெற்றுக்கொண்ட அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கை (205), சிறந்த துடுப்பாட்ட இணைப்பாட்டம் (குயிண்டன் டி கொக்- ரொஸ்சவ் 163 ஓட்டங்கள் இணைப்பாட்டம்) மற்றும் தனியொரு வீரரின் அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கை (ரொஸ்சவ் 109)போன்ற சாதனைகள் இப்போட்டியிலேயே பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.