முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக 226 பேர் உயரடுக்கு பாதுகாப்பு பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எலைட் பாதுகாப்பு பிரிவில் சுமார் 6,000 பொலிஸ் அதிகாரிகள் உள்ளனர் என்றும் இந்த 6000 பேரில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் பல விடயங்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய முன்னாள் ஜனாதிபதிக்கு உயரடுக்கு பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 226 பேர் பாதுகாப்பில் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருபுறம், 4000 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் மா அதிபர் தெரிவிக்கையில், மறுபுறம், 16,000 பேர் ஓய்வு பெறுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த 4,000 பேருக்கு சேவை நேரம் வழங்க உரிமை உண்டு என தான் எண்ணுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்கள் நோய்வாய்ப்பட்டார்களா, அல்லது பொலிஸில் பணியமர்த்தப்பட்டபோது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டதா, பொலிஸ் நடவடிக்கையின் போது அவர்கள் ஊனமுற்றார்களா, பொலிஸ்க்கு வந்ததும் மன அழுத்தம் அதிகரித்து அவர்களுக்கு நீரிழிவு நோய் வந்ததா என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும் இந்த 4,000 பேருக்கு சேவை செய்ய வாய்ப்பு கொடுக்குமாறும் குறைந்தபட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் பணியாற்றுவதற்கான உரிமையை அவர்களுக்கு வழங்குங்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.