சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் விரைவில் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளி அறிக்கையில், ‘சீனாவுடன் வரலாற்று ரீதியான உறவு உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகைக்கு முன்னர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பு முக்கியமானதாக அமைந்தது’ என்று சவுதி இளவரசர் பைசல் பின் ஃபர்கான் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஸி ஜின்பிங் உடனான சந்திப்பை சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
சீனாவிற்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சவுதி அரேபியா செய்து வருவதாகவும் சவுதி வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
சீன ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ஸி ஜின்பிங் பதவியேற்றப் பிறகு, அவர் மேற்கொள்ளும் முதல் சர்வதேச பயணமாக இது அமையவுள்ளது.
சீன ஜனாதிபதியின் எதிர்பார்க்கப்படும் வருகை குறித்து, சவுதி அரேபியாவில் உள்ள சீன தூதரகம் கருத்து தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில், சீனாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தில் அளிக்க எந்த தகவலும் இல்லை என்று கூறியது.
அமெரிக்காவின் வேண்டுகோளை புறக்கணித்து, ‘ஒபெக் பிளஸ்’ கார்டெல் எண்ணெய் உற்பத்தியைக் குறைத்த பின்னர், சவுதி அரேபியாவிற்கும் நீண்டகால நட்பு நாடான அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்ட விரிசலுக்குப் பிறகு சீன ஜனாதிபதியின் இந்த வருகை அமையவுள்ளது.