அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசி, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபரால், சுத்தியலால் தாக்கப்பட்ட பின்னர் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வருகிறார்.
82 வயதான பால் பெலோசி, மண்டை உடைந்து, வலது கை மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சான் பிரான்சிஸ்கோ பொலிஸ்துறைத் தலைவர் வில்லியம் ஸ்காட், வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 02:27 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டில் 42 வயதுடைய டேவிட் டிபேப் என பொலிஸாரால் அடையாளங் காணப்பட்டுள்ளார். எனினும், இந்த தாக்குதலில் எந்த உள்நோக்கமும் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபர் சான் பிரான்சிஸ்கோ வீட்டிற்குள் நுழைந்த பின்னர் பெலோசியைப் பார்க்கக் கோரியதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலின் போது வொஷிங்டன் டிசியில் இருந்த பெலோசி, தகவலறிந்த பின்னர், தனது கணவரை மருத்துவமனையில் பார்க்க விமானம் மூலம் திரும்பினார்.
தற்போது, பால் பெலோசி, அறுவை சிகிச்சைக்காக ஜுக்கர்பெர்க் சான் பிரான்சிஸ்கோ பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் முழு குணமடைவார் என்று மருத்துவர்கள் எதிர்பார்ப்பதாகவும் பெலோசியின் செய்தித் தொடர்பாளர் ட்ரூ ஹம்மில் கூறினார்.