உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட நாடு முழுவதும் ரஷ்யா பாரிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதால் மின்சாரம் மற்றும் தண்ணீர் துண்டிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் கீவ்வில் குறைந்தது இரண்டு குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளன. வடகிழக்கு நகரமான கார்கிவில், முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவில் அதன் கருங்கடல் கடற்படை மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதற்கு உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் வந்துள்ளன.
இன்று (திங்கட்கிழமை) காலை, மத்திய வின்னிட்சியா பகுதியிலும், தென்கிழக்கில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் ஸபோரிஸியாவிலும், மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவிலும் ஏவுகணை தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
ஸபோரிஸியா பகுதியில் உள்ள டினிப்ரோ நீர்மின் நிலையத்திலும் ஒரு பகுதி பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தலைநகர் கீவ்வில் 350,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கும் வசதி சேதமடைந்தது, விநியோகத்தை மீட்டெடுக்க பொறியாளர்கள் அவசரமாக அனுப்பப்பட்டனர்.
மேலும் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடரலாம் என்ற அச்சத்தின் மத்தியில், தாக்குதலுக்கு உள்ளான பிராந்தியங்களில் வசிப்பவர்கள் தங்குமிடங்களில் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டனர்.