நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி மேலுமொருவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.
கனமழை மற்றும் அதிக காற்று காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களில் 152 குடும்பங்களைச் சேர்ந்த 524 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பதுளை மாவட்டத்திலயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அங்கு 61 குடும்பங்களைச் சேரந்த 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தங்களினால் 127 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படுவதால் சீரற்ற காலநிலை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடியசாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.