ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 குழு-02இல் நடைபெற்ற தொடரின் 36ஆவது போட்டியில், பாகிஸ்தான் அணி, 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சிட்னியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பாகிஸ்தான் அணியும் தென்னாபிரிக்கா அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சதாப் கான் 52 ஓட்டங்களையும் இப்தீகார் அஹமட் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், நோக்கியா 4 விக்கெட்டுகளையும் பார்னெல், ரபாடா, லுங்கி ங்கிடி மற்றும் சம்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வேளை மழைக் குறுக்கிட்டதால், போட்டி 14 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு 142 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனால், பாகிஸ்தான் அணி, 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டெம்பா பவுமா 36 ஓட்டங்களையும் ஹெய்டன் மார்கிரம் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஷாயின் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும் சதாப் கான் 2 விக்கெட்டுகளையும் நஷிம் ஷா, ஹரிஸ் ரவூப் மற்றும் வசிம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 52 ஓட்டங்களையும் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் சதாப் கான் தெரிவுசெய்யப்பட்டார்.